சாட்சி- 1
2006 ம் ஆண்டில்
இலங்கையில், என் சொந்த ஊரான மன்னாரிலிருந்து வேலை மாற்றம் பெற்று நானும் என் குடும்பத்தினரும்
கிளிநொச்சிக்கு சென்று குடியிருந்தோம். அப்பொழுது 4 வருட யுத்த நிறுத்தம் முறிவடைந்து
மெல்ல மெல்ல போர் ஆரம்பித்திருந்தது. இறுதியில் 2008ம் ஆண்டில் போர் மும்முரமாகியது.
நானும் என் கணவனும் இரண்டு பிள்ளைகளும் எல்லோரையும் போல இடம்பெயரத் தொடங்கினோம். இரண்டு
வாரங்களுக்கு ஒரு இடம் என்ற விகித்தத்தில் மாறி மாறி அலைந்தோம். இந்த வேளையில் நான்
கொண்டிருந்த ஒரே நம்பிக்கை –ஆண்டவர் நம்மைக் கை விடமாட்டார், எந்த தீங்கும் நமக்கு
நேராது என்பதே. இருந்தாலும் அவ்வப்போது நாம் தப்பமாட்டோமோ என்றும் மனம் எண்ணும்.
நான் ஒரு றோமன்
கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தவள். அப்போது எனக்கு கல்லறை ஆண்டவர் மேலும் (மரித்த
யேசுவை கல்லறையில் வைத்திருப்பது போல ஒரு சுருவத்தை ஆலயங்களில் வைத்திருப்பார்கள்.
அந்த ஆண்டவரை `கல்லறை ஆண்டவர்` என்றும் `கர்த்தர்` என்றும் கூறுவார்கள்.) பரிசுத்த
ஆவியின் வல்லமை மீதும் எனக்கு அதிக நம்பிக்கை இருந்தது. இதனால் எப்பொழுதும் பதுங்கு
குழிக்குள் இருந்த வண்ணம் கல்லறை ஆண்டவரின் செபத்தை சொல்லியபடியே இருப்பேன். நான் மிகவும்
பயந்தவளாகவே இருந்தேன். இந்த நாட்களில் மூன்று தடவைகள் தொண்டு நிறுவனங்களின் ஒன்றுகூடலுக்கு
சமூகமளிக்க வேண்டியிருந்தது. வலையன்மடம் ஆலயத்தில் வைத்தியர்கள், உளவளத் துணையாளர்கள்
மற்றும் அரச சார்பற்ற நிறுவன பணியாளர்களும் சேர்ந்து மக்களுடைய நிலை பற்றியும் அந்நேர
சேவைகள் பற்றியும் கலந்துரையாடுவார்கள். இந்த ஒன்றுகூடலுக்கு நான் சற்று தொலைவிலிருந்துதான்
செல்ல வேண்டியிருந்தது. என் கணவனோடு மோட்டார் சைக்கிளில் செல்லும் போது, `ஆவியானவரே
என்னோடு கூட வாரும், என்னைப் பாதுகாரும்` என்று உச்சரித்துக் கொண்டே செல்வேன். அப்பொழுது
ஆவியானவர் எங்கள் தலைகளுக்கு மேலே புறா வடிவிலே தன் சிறகுகளை அகல விரித்துக் கொண்டு
வருகிறார் என்று கற்பனை செய்து கொள்வேன். அந்தக் கற்பனை என்னைத் தைரியப் படுத்தியது.
அது பயங்கர செல்வீச்சு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். அந்தப் பாதையில் எத்தனையோ பேர்
குண்டுக்கு இலக்காகி இறந்திருக்கிறார்கள். ஆனால் தேவன் எங்களோடு இருந்தார்.
அந்தக் கோரமான
நாட்களில் பலர் இறந்தும், காயங்கள் பட்டும், நோய்வாய்ப்பட்டும் அதற்கான மருத்துவ வசதியுமில்லாமல்
துன்பப்பட்டார்கள். பட்டினிச் சாவுகளும் கூட அங்கே நடந்தன. ஆனால் சகல துன்பங்களிலிருந்தும்
தேவன் என்னையும், என் குடும்பத்தாரையும், என்னோடு கூட இருந்தவர்களையும் தன் சிறகுகளால்
மூடிப் பாதுகாத்தார். சிறு கீறல் காயமேனும் எமக்கு ஏற்படவில்லை.
-தொடரும்-
